உருவாக்கப்பட்ட காரணம்

தமிழ்நாட்டின் பெரும்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர். வேறெங்கும் காண முடியாத அளவில் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக பட்டம் பெறுகின்றனர். தமிழ்நாட்டு மாணவர் மற்றும். இளைஞர்களின் அறிவியல் ஆராய்ச்சி அறிவு உலக அறிவியல் வளர்ச்சிக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் பங்களிப்பை செய்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படித்த தமிழ்நாடு மாணவர் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையில் இருந்து பார்த்தால் இது மிகச் சிறிய பங்களிப்பே!

 

உலக அறிவியல் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மாணவர்களின் பங்களிப்பை விட தமிழ்நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்களிப்பு செய்ய கடமைப்பட்டவர்களாக இருப்பினும், அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டதாகவோ அல்லது அதனால் ஏற்பட்ட நேர்மறை விளைவுகள் குறித்தோ நமக்கு எந்த தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை.

 

தமிழ்நாட்டின் பெரும் பகுதி இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி கற்றவர்களாக இருந்தாலும், அதனூடாக அறிவியல் அறிவை பெற்றவர்களாக இருக்கவில்லை. வெறும் கல்வி கற்றவரிகளாகவும், பட்டம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்களே ஒழிய அறிவு பெற்றவர்களாகஎண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர்.

 

பல்வேறு ஒழுங்கில்லாத கட்டமைப்புகளால் இக்குறைபாடுகள் நீடித்தாலும் இத்தகைய குறைபாடுகளை களைய வேண்டும் என்கிற எண்ணம் இல்லாததும் அல்லது அதற்கான பணியை செய்வதற்கு யாரும் முன் வராததும் நான் இக்குறைபாடுகள் தொடர்ந்து நீடிக்க முதன்மையான காரணமாக பார்க்கப்படவேண்டும்.

 

இவ்வாறான குறைகளை களைய, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் திறன் படைத்தோராக மாற்ற ஒரு அறிவியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டியது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் அவசியமாகிறது.

 

மேற்கூறியுள்ள நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் பொருட்டு நம் இந்த அறிவியல் இயக்கமானது தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறிவியல் படைப்பாற்றலையும் மக்களின் தேவைகளையும் கண்டறிந்து அதன் வழியாக,

 

  • தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்ப்பது.
  • மக்கள் நலனுக்கான அறிவியலை மக்களிடத்தில் பரவலாக்குவது.
  • அறிவியல், ஆராய்ச்சித் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவது.
  • மற்றும், அதனூடான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அடைவது.
  • தமிழ்நாட்டின் அறிவியல் சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பயன்பெறுவது மற்றும் பங்கு கொள்வது.
  • தமிழ்நாட்டு அறிவியல் வளர்ச்சிக்காடை பங்களிப்பை செய்வது, உலக அறிவியல் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்வது.
  • அறிவியலை மக்கள் மன்றத்தில் நிறுவும் பணியை செய்வது.

 

மேற்குறிப்பிட்டுள்ள நோக்கங்களை அடைவதற்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மன்றம் எனும் கட்டமைப்பு அவசியமாகிறது.

“அறிவியலை தமிழ்படுத்துவோம்,
மக்களை அறிவியல்படுத்துவோம்”